திருச்சி: திருச்சி அருகே நகைக்காக அடுத்தடுத்து 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 கொலைகளுக்கு மட்டும் சப்பாணிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. சப்பாணி மீது உள்ள மேலும் 6 கொலை வழக்குகளுக்கு ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்படலாம் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (34). கார் ஓட்டுநர். இவர் 2016 செப். 7-ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து விசாரித்த திருவெறும்பூர் போலீஸார், தங்கத்துரையின் செல்போனை, கிருஷ்ணசமுத்திரத்தைச் சேர்ந்த சப்பாணி(35) என்பவர் பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர்.
சப்பாணியை பிடித்து விசாரித்தபோது, 2 பவுன் நகைக்காக தங்கதுரையை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் புதைக்கப்பட்டிருந்த தங்கதுரை சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. தொடர் விசாரணையில், இதேபோல, தனது தந்தை தேக்கன் (75), திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தைச் சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சியைச் சேர்ந்த அற்புதசாமி (70), கீழ குமரேசபுரத்தைச் சேர்ந்த விஜய் விக்டர் (27), கூத்தப்பாரை சேர்ந்த சத்தியநாதன் (45), பெரியசாமி (75), வடகாடு விஸ்வம்பாள் சமுத்திரத்தைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் குமரேசன் (50) என மேலும் 7 பேரை நகைக்காக சப்பாணி கொலை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதுதொடர்பான வழக்கு, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தங்கதுரை, சத்தியநாதன் ஆகியோர் கொலைக்கான வழக்குகளில் நீதிபதி கே.பாபு நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட சப்பாணி குற்றவாளி என தீர்ப்பளித்து, அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சப்பாணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சவரிமுத்து ஆஜராகி வாதாடினார்.
சப்பாணி மீது உள்ள மேலும் 6 கொலை வழக்குகளுக்கு ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்படலாம் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.