திருக்கழுக்குன்றம்: திருக்கழுகுன்றம் அருகே குடும்ப தகராறு காரணமாக, இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவர் மீட்கப்பட்ட நிலையில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
திருக்கழுகுன்றத்தை அடுத்த ஆயிர்பாடி பகுதியைச் சேர்ந்த ரேவதி - மேகநாதன் தம்பதிக்கு 5 வயதில் காவியா என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த ரேவதிக்கு 2 மாதங்கள் முன்பு பெண் குழந்தை பிறந்தது. குடும்பப் பிரச்சினை தொடர்பாக ரேவதிக்கும் அவரது தாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் மன வருத்தம் அடைந்த ரேவதி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இரும்புலி கிராம பகுதியில் உள்ள ஒரு வயல் வெளிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள கிணற்றில் தனது 2 குழந்தைகளையும் தூக்கி வீசி விட்டு ரேவதியும் கிணற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில் குழந்தைகள் உயிரிழந்தன. அப்போது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் குழந்தைகளின் உடல்களை மீட்டனர். இது குறித்து திருக்கழுகுன்றம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.