க்ரைம்

சென்னை | கூரியர் வேனில் ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த ரூ.1.08 கோடி பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: செங்குன்றம் அருகே கூரியர் வேனில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.1.08 கோடியை பறிமுதல் செய்து, போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

செங்குன்றம் மொண்டியம்மன் நகரில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸார் நேற்று வாகனங்களை சோதனை செய்து வந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த கூரியர் நிறுவனத்தின் பார்சல்களை ஏற்றி வந்த வேனை போலீஸார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது 3 பைகள் பார்சல் செய்யப்படாமல் இருந்துள்ளது, அதை சோதனை செய்தபோது அதில் பணம் இருந்துள்ளது. இதையடுத்து 3 பைகளில் கொண்டு வரப்பட்ட ரூ.1.08 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

கூரியர் வேனில் கொண்டு வரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஆந்திராவைச் சேர்ந்த பிரவீன்(36), பவன் (28) மற்றும் வேன் ஓட்டுநர் ராம்பாபு (40) ஆகிய மூவரை செங்குன்றம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் விஜயவாடாவில் இருந்து சென்னை வந்த கூரியர் வேனில் இருந்த பிரவீன், பவன் ஆகிய இருவரும் லிப்ட் கேட்டு வந்ததாகவும், சென்னையில் தங்க நகை வாங்குவதற்காக ரூ.1.08 கோடி பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்டது ஹவாலா பணமா எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பிடிபட்ட நபர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT