சென்னை: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்ஐ மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக மது போதையிலிருந்த பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் எஸ்ஐ-யாக பணி செய்பவர் கார்த்திகேயன் (54). இவர் நேற்று முன்தினம் இரவு, அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் அருகே, டேம்ஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எஸ்ஐ கார்த்திகேயன் ஓடிச்சென்று அவரை தூக்கிவிட்டார். அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால், சம்பந்தப்பட்ட இளைஞர் இருசக்கர வாகனத்தோடு கீழே சாய்ந்தது தெரியவந்தது. அவர் மீது மது போதையில் இருந்ததாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர் ஓட்டி வந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். மறுநாள் வந்து வாகனத்தை பெற்றுச் செல்லும்படி அறிவுறுத்தினர்.
ஆனால், அந்த இளைஞர் அங்கிருந்து செல்ல மறுத்து, பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை தன்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தினார். ஆனால், போலீஸார் கொடுக்க மறுத்ததால் எஸ்ஐ கார்த்திகேயனை சரமாரியாகத் தாக்கினார். இதை உடனிருந்த காவலர் சிவகுருநாதன் தடுத்ததால், அவரும் தாக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை சுற்றி வளைத்து, காவல் வாகனத்தில் ஏற்றி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
போலீஸாரின் விசாரணையில் போலீஸார் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த மார்க் (23) என்பதும், பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. காயமடைந்த 2 போலீஸாரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.