விழுப்புரம்: குற்றச்செயல்களுக்கான முன்தடுப்பு நடவடிக்கை என்பது காவல்துறையினருக்கு நாளுக்கு நாள் சவாலான ஒரு விஷயமாக மாறி வருகிறது. அவர்கள் அப்பணியைச் செய்ய அவ்வப்போது தொழில்நுட்பமும் கைகொடுத்து வருகிறது. அதில் ஒன்று ‘ட்ரோன் கேமரா’ மூலம் குறிப்பிட்ட பகுதியைக் கண்காணிப்பது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் கடற்கரைப் பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன் விஷ சாராயத்தை குடித்து, 14 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு தற்போதும் உடல்நல பாதிப்பு உள்ளது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர்களில் ஒருவர், கடந்த வாரம் இறந்து விட்டார்.
மரக்காணம் எக்கியர்குப்பம் பகுதி கடற்கரை மிக அழகான இயற்கை சூழலைக் கொண்டது. ஆனாலும், மக்கள் நடமாட்டம் சற்று குறைந்த இந்த கடற்கரையோர பகுதியில் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அவ்வப்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. காவல்துறையினர் இவர்களைப் பிடித்து போதை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.
இருந்தாலும், இப்பகுதியை கண்காணிப்பது சற்று சவாலாக உள்ளது. தற்போது இப்பகுதி போதை நடமாட்டத்தை கண்டறிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக உத்தரவின் பேரில், காவல் துறையினர் ‘ட்ரோன் கேமரா’ மூலம் கண்காணிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தற்போது இக்கடற்கரைப் பகுதியை இந்த ‘ட்ரோன் கேமரா’க்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில் மேற்பார்வையில், மரக்காணம் காவல் நிலையத்தினர் எக்கியர்குப்பம் மீனவ மக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.“யாரேனும் போதைப் பொருட்களை விற்றால், உடனே தகவல் தெரிவிக்கவும்; தகவல் கொடுப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருட்களை ஒழிக்க சட்டம் - ஒழுங்கை முறையாக பேணல், சமூக ஒத்துழைப்பு என பலவிதங்களிலும் முயற்சிகள் தேவை. அந்த முயற்சிக்கு முத்தாய்ப் பாக இந்த ‘ட்ரோன்’ கண்காணிப்பும் உதவட்டும்.