கோவை: கோவை போத்தனூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்பட்டு வந்த சந்தன மரங்கள் சமீபகாலமாக மர்மநபர்களால் தொடர்ந்து வெட்டிக் கடத்தப்பட்டு வந்தன. இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார்களும் அளிக்கப்பட்டன. இச்சம்பவங்களைத் தொடர்ந்து கோவை போத்தனூர் சரக காவல்துறையினர் தங்களது கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், போத்தனூர் சரக காவல் எல்லைக்குட்பட்ட எல் அன்ட் டி பைபாஸ் சாலை வழியாக, மர்ம நபர்கள் சந்தன மரங்கள் கடத்த திட்டமிட்டுள்ளதாக போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை, வெள்ளலூர் எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பேக்கரி அருகே நேற்று முன்தினம் அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மரக்கட்டைகளை ஏற்றிய ஒரு லாரி வந்தது. காவல்துறையினர் நிறுத்தக் கோரியும் நிறுத்தாமல் சென்ற அந்த லாரியை பின் தொடர்ந்து சென்றனர்.
இதையடுத்து சுமார் 130 கிலோ மீட்டர் துரத்திச் சென்று சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே லாரியை காவல்துறையினர் பிடித்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் லாரியை சோதனை செய்தனர். அதில் லாரியின் பின்புறம் ஒரு ரகசிய அறை அமைத்து சந்தன மரக்கட்டைகளைக் கடத்தியதும், அது தெரியாமல் இருக்க சாதாரண மரக்கட்டைகளை மேலே போட்டு மறைத்து எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
57 மூட்டைகளில் மொத்தம் 1,051 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருப்பதும், மலப்புரத்தில் இருந்து கோவை வழியாக சென்னைக்கு கடத்திச் சென்று, பின்னர் அங்கிருந்து ஆந்திராவுக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது. லாரியை ஓட்டி வந்த மலப்புரத்தைச் சேர்ந்த மனோஜை காவல்துறையினர் கைது செய்தனர்.