பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து ராஜஸ்தானுக்கு ரூ.21 லட்சம் மதிப்புள்ள தக்காளியை ஏற்றிச்சென்ற லாரி மாயமாகியுள்ளது. இதுதொடர்பாக கோலார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெங்களூரு சந்தைகளில் 1 கிலோ தக்காளி ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. தக்காளிக்கு மவுசு அதிகரித்திருப்பதால் தோட்டத்தில் தக்காளி காணாமல் போவதும், வாகனத்தில் ஏற்றி செல்லும் தக்காளி காணாமல் போவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 28ம் தேதி கர்நாடகாவில் உள்ள கோலாரை சேர்ந்த தக்காளி வியாபாரி புருஷோத்தம் லாரி மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ரூ.21 லட்சம் மதிப்புள்ள தக்காளியை அனுப்பினார். இந்த லாரி கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாயமானது. அதன் ஓட்டுநரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி உடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த புருஷோத்தம் தக்காளி ஏற்றிசென்ற லாரியை காணவில்லை என்று கோலார் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தக்காளி விலை உயர்வின் காரணமாக ஓட்டுநரே லாரியை கடத்தினாரா அல்லது வேறு ஏதாவது கும்பல் தக்காளியுடன் லாரியை கடத்தி சென்றுள்ளதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.