க்ரைம்

மாணவரை தாக்கி வழிப்பறி: மதுரவாயலில் 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மதுரவாயல், கந்தசாமி நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் யோகேஷ்வரன் (17). தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 28-ம் தேதி கல்லூரி முடிந்து மதுரவாயல் கந்தசாமி நகர், முதல் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர்யோகேஷ்வரனை கத்தியால் தாக்கி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.

காயம் அடைந்த அவர் சிகிச்சைபெற்ற பின்னர், இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் கல்லூரிமாணவனிடம் வழிப்பறி செய்ததாக செம்மஞ்சேரி சுனாமி நகர் பரமேஷ்வரன் (24), அவரது கூட்டாளிகள் தேனாம்பேட்டை விக்னேஷ் (19), அதே பகுதி சத்யா (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள், 1 கத்தி, 1 இரும்புராடு, 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பரமேஷ்வரன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து கோயம்பேடு, திருவேற்காடு பகுதிகளில் பைக்குகளை திருடி அவற்றில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT