க்ரைம்

திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளை: கோவையை சேர்ந்த காவலரின் கணவர் உட்பட 2 பேர் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூரில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக் கடையின் உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி, ரூ.16 லட்சத்தை பறித்துச் சென்ற கோவையைச் சேர்ந்த காவலரின் கணவர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காமாட்சி அம்மன் கோயில் வீதியில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹஜ்மத் சிங் (40) என்பவர் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு இவரது கடைக்கு பொருட்கள் வாங்குவதைப் போல வந்த 6 பேர் கும்பல், திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி ஹஜ்மத் சிங்கை மிரட்டி ரூ.16 லட்சம் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு காரில் தப்பினர்.

தகவலின் பேரில், திருப்பூர் தெற்கு போலீஸார் வந்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியில் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை நிறுத்திவிட்டு கும்பல் தப்பியது.

காரில் பதிவாகி இருந்த கை ரேகைகளை போலீஸார் பதிவு செய்ததோடு, கார் பதிவெண்ணை கொண்டு அதன் உரிமையாளர் சக்திவேலை பிடித்து விசாரித்தனர். இதில், சக்திவேலின் மனைவி, கோவையில் காவலராக பணியாற்றி வருவதும், இந்த கொள்ளைக்கு மூலகாரணமாக சக்திவேல் செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, சக்திவேலை கைது செய்த போலீஸார், அவர் அளித்த தகவலின் பேரில், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி ஆவாரங்காட்டை சேர்ந்த அழகர் (32) என்பவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர்.

திருப்பூர் தெற்கு போலீஸார் கூறும்போது, ‘‘திருப்பூரில் பணியாற்றும் வட மாநிலத்தவர்கள் சிலரிடம் பணம் வாங்கி, சென்னை, பெங்களூரு, டெல்லி மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு கமிஷன் அடிப்படையில் ஹஜ்மத் சிங் அனுப்பி வந்துள்ளார். இதையறிந்த கும்பல், அவரிடமிருந்து பணத்தை பறித்துச் சென்றுள்ளது.மேலும் 4 பேரை தேடி வருகிறோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT