விருத்தாசலம்: அன்றாட உணவில் பயன்படுத் தப்படும் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதால் கிலோ ரூ.200வரை விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இதையடுத்து அரசு ரேஷன் கடை, பண்ணை பசுமை காய் கறி கடைகள் ஆகியவை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இந்தச் சூழலில் சில இடங்களில் தக்காளி கடத்தல், திருட்டு போன்ற சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. திட்டக்குடி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டில் 20-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன.
அதில் ஒரு கடையில் நேற்று காலை 200 கிலோ தக்காளி திருடு போனது. இது குறித்து காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்கப் பொருளாளர் வளையாபதி, செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.