சென்னை: சென்னையில் ரயில்வே தண்டவாளம் அருகே மது, கஞ்சாவுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிறுவர்கள், கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா கேட்டு மிரட்டி அவர்களை தாக்கிவிட்டு, அவர்களிடம் இருந்து நகைகளை பறித்து விட்டு தப்பி ஓடினர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் தனது பிறந்த நாளையொட்டி தனது நண்பர்களுக்கு நேற்று முன்தினம் மதுவுடன் சேர்த்து கஞ்சா விருந்து வைத்ததாக கூறப்படுகிறது. இதற்காக அந்த மாணவன், தன்னுடன் படிக்கும் சக நண்பர்கள் 3 பேர் உட்பட 6 பேரை விருந்துக்கு அழைத்துள்ளார்.
இதையடுத்து, 7 பேரும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள அக்கல்லூரியின் பின்புறம் ரயில்வே தண்டவாளம் ஓரம் அமர்ந்து மதுவுடன் கஞ்சாவும் புகைத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல்,அதே பகுதியில் அமர்ந்து கஞ்சா புகைத்ததாக சொல்லப்படுகிறது. பின்னர், அந்த கும்பல் கொண்டு வந்த கஞ்சா தீர்ந்துவிட்டதால், அருகில் இருந்த கல்லூரி மாணவர்களிடம் பேச்சு கொடுத்து தங்களுக்கு கஞ்சா கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.
கஞ்சா இல்லை என்றதும், அனைவரும் கத்தியை காட்டி மிரட்டி, கல்லூரி மாண வர்களை சரமாரியாக தாக்கி விட்டு, அவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க நகை, வெள்ளி மோதிரம் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் 3 கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீழ்ப்பாக்கம் போலீஸார், காயமடைந்த மாணவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் விசாரணை: இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது, சூளைமேடு, செனாய் நகர் பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, பள்ளி மாணவன் உட்பட 4 சிறுவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.