க்ரைம்

வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி - சென்னையில் 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சிம்பாக்ஸ் அமைத்து, வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கிண்டி மடுவண்கரை பகுதியில் சட்டவிரோதமாக தொலைத் தொடர்பு அமைப்பு ஒன்று செயல்பட்டு வருவதாக மத்திய தொலைத் தொடர்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், தொலைத்தொடர்பு அதிகாரிகள் இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்தில் சோதனை செய்ததில், அங்கு சிம்பாக்ஸ்கள் அமைத்து, வெளிநாட்டு அழைப்புகளை, உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.

அதாவது, உரிமம் பெற்ற சர்வதேச நீண்ட தூர ஆபரேட்டர்கள் (ஐ.எல்.டி.ஓ) நெட் வொர்க்கைத் தவிர்த்து, சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்ற சந்தாதாரர் அடையாள தொகுதி (சிம்) பெட்டிகள் மற்றும் சிம் அடிப்படையிலான வயர்லெஸ் இணைய ரூட்டர் / எஃப்.டி.டி.எச் ரூட்டர் ஆகியவற்றைக் கொண்ட சட்டவிரோத தொலைத் தொடர்பு அமைப்பு பயன்படுத்தப்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது நசீர்முக்கிய குற்றவாளியாக செயல்பட்டதும், கல்லூரி மாணவர்கள் அப்துல் மாலிக், சுப்பிரமணி ஆகிய இருவர் ரூட்டர்களை இயக்கியதும் தெரியவந்தது. இதனால், தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். 250 ஏர்டெல் சிம்கள், 4 சிம் கேட்வேகள், எஃப்.டி.டி.எச் ரூட்டர்,வைஃபை சிம் ரூட்டர் தலா 1, மேலும் சிம் கார்டுகள், யு.பி.எஸ் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT