கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கந்துவட்டி கொடுமையால் விஷம் அருந்திய தம்பதியரில் கணவன் உயிரிழந்தார். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதியர் பிரகாஷ் (48) சரிதா (42). அதிமுகவில் அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளரான பிரகாஷ், சொந்தமாக கார் ஒன்றை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
இந்நிலையில், பிரகாஷ் - சரிதா தம்பதி, நேற்று முன்தினம் இரவு கடிதம் மற்றும் வீடியோ பதிவை தங்களுக்கு நெருக்கமான சிலருக்கு மொபைல் மூலம் அனுப்பினர். பிறகு, அவர்கள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரிதா தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரகாஷ், தொழில் பாதிப்பு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜாவிடம் ரூ. 1.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அதற்கு, ரூ. 100-க்கு, ரூ.10 வட்டி என்கிற வீதம் மாதம்தோறும் ரூ.11 ஆயிரத்தை வட்டியாக செலுத்தி வந்துள்ளார் பிரகாஷ்.
இச்சூழலில், கரோனா காலத்தில் தொழில் முடங்கியதால் வட்டி செலுத்த முடியாத இருந்து வந்த பிரகாஷுக்கு, பல வகையில் நெருக்கடியை கொடுத்து வந்த ராஜா, ஒரு கட்டத்தில் ரவுடிகள் மூலம் மொபைல் போனில் மிரட்டி வந்ததாக தெரிகிறது.
இதனால், அச்சமடைந்த பிரகாஷ்- சரிதா தம்பதி, நேற்று முன்தினம் பணத்துக்காக உறவினர்கள், நண்பர்களை நாடியுள்ளனர். ஆனால், பணம் கிடைக்கவில்லை. இதனால், ராஜாவின் மிரட்டலுக்கு பயந்து தம்பதியர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸார் தலைமறைவான ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.