க்ரைம்

வங்கி பெயரில் லிங்க் அனுப்பி பண மோசடி நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க போலீஸார் அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை: சைபர் குற்றங்கள் (இணைய வழிகுற்றங்கள்) நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ‘இந்தியா போஸ்ட்பேமன்ட் வங்கி'யின் வாடிக்கையாளர்களை குறிவைத்து பண மோசடி செய்யும் விதமாக அந்தவங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு சைபர் குற்றவாளிகள் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.

அதில், உங்கள் இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஆகையால், குறுஞ் செய்தியிலுள்ள விங்க்கை கிளிக் செய்து உடனே உங்கள் பான் கார்டு எண்ணை அப்டேட் செய்யுங்கள் என கூறுவர். இதை நம்பி இணைய வழி மோசடிநபர் அனுப்பிய அந்த லிங்க்கை பொதுமக்கள் கிளிக் செய்தவுடன் இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியின் இணையதளம் போல ஒருபோலி இணையதளம் தோன்றும்.

அதில் வாடிக்கையாளர் தங்களது வங்கி சேமிப்பு கணக்கு எண், வாடிக்கையாளர் அடையாள எண், கைப்பேசி எண், பிறந்த தேதி, நிரந்தர கணக்கு எண் (PAN), ஆதார் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய கேட்கும். அந்த தகவல்களை அந்த இணைய தளத்தில் கொடுத்த பின்பு ஓடிபி-யை பதிவு செய்ய கேட்கும்.

அதில், ஓடிபி-யை பதிவு செய்தவுடன் வாடிக்கையாளரின் இந்தியாபோஸ்ட் பேமண்ட் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபரின் வங்கிக் கணக்குக்கு பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வாடிக்கையாளர் ஏமாற்றப்படுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி சஞ்சய்குமார், ``அறிமுகம் இல்லாத நபர்களிடம் தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல், வாட்ஸ்-அப், டெலிகிராம், இதர சமூக ஊடக கையாளுதல்கள் மூலம் வரும் லிங்க்-களை தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், ஓடிபி-யை பகிர வேண்டாம்'' என அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT