சென்னை: வங்கி கடனை கேட்டு ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தண்டையார்பேட்டை விநாயகபுரம் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் ரகுராமன் (38). இவர் மணலியில் உள்ள ஓர் உலோக பட்டறையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும், 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு ரகுராமன், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். இந்த கடனை ரகுராமன் வட்டியுடன் செலுத்தி வந்தார். கடைசி 3 மாதங்கள் அவர்,கடனுக்கான மாதாந்திர தவணையை செலுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த வங்கியின் ஊழியர்கள், கடனை திருப்பிக் கேட்டு ரகுராமனுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார். இதனால் விரக்தியுடன் காணப்பட்ட ரகுராமன், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பார்த்து அவர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த காசிமேடு போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று ரகுராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தனியார் வங்கி ஊழியர்கள் இருவரை பிடித்து விசாரணை செய்கின்றனர்.
தற்கொலைக்கு முன்னதாக ரகுராமன், வேலைக்கு சென்றிருந்த மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி ஊழியர்களின் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள். நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.