மதுராந்தகம்: சென்னை, சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள புதிய குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் நிகமத்துல்லா. இவர், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இவரது தொழிலின் பங்குதாரரான மகன் அக்பரும் இத்தொழிலை மேற்கொண்டு வருகிறார்.
இதில், செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சீவாடி கிராமத்தை சேர்ந்த கண்ணபிரான் என்பவருக்கு சொந்தமாக, அதேபகுதியில் சர்வே எண் 197/2-ல் உள்ள 3.36 ஏக்கர் நிலத்தை புதிய மனை பிரிவாக விற்பனை செய்ய அக்பர் பொது அதிகாரம் பெற்று விற்பனை செய்துள்ளார். பின்னர், நிகமத்துல்லாவும் இப்பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதில், மனை எண் 140-ல் உள்ள 474 சதுரடி மற்றும் மனை எண் 141-ல் உள்ள 602 சதுரடி உள்ள மனைகளில் வீடு கட்டுவதற்காக, சீவாடி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வரும் திமுகவைச் சேர்ந்த அரங்கநாதனிடம், வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்க கடந்த 5-ம் தேதி விண்ணப்பித்துள்ளார். ஆனால், ஊராட்சி மன்ற தலைவர் ஒவ்வொரு மனை பிரிவுக்கும் தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் வழங்கினால் வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனால், தொடர்ந்து ஊராட்சி தலைவரிடம் விண்ணப்பதாரர் அனுமதி கேட்டு வந்துள்ளார். எனினும், அனுமதி வழங்காமல் ஊராட்சி மன்ற தலைவர் தாமதப்படுத்தியுள்ளார். இதனால், ஊராட்சி மன்ற தலைவர் மீது சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸில் நிகமத்துல்லா புகார் அளித்தார்.
இதன்பேரில், சென்னையை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் வழக்கு பதிவு செய்தனர். மேலும், போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் சீவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து விண்ணப்பதாரரிடம் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதன் ரூ.30 ஆயிரம் பணம் பெற்றார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.