மதுரை: குன்னத்தூர் இரட்டை கொலை வழக்கில் சரியாக விசாரிக்காத செல்லூர் உதவி காவல் ஆணையர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை குன்னத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்: "என் சகோதரர் கிருஷ்ணராஜன் மதுரை மாவட்டம் வரிச்சூர் அருகே குன்னத்தூரில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். அவரும், அவரது நண்பர் முனியசாமியும் 2020 அக்டோபர் மாதம் குன்னத்தூர் அகஸ்தீஸ்வரரர் கோயில் அருகே கொலை செய்யப்பட்டனர்.
இக்கொலையில் முன்னாள் ஊராட்சித் தலைவர் திருப்பதி, ஊராட்சி செயலாளர் வீரணன் என்ற பால்பாண்டி, வரிச்சூர் செந்தில், குன்னத்தூர் பால குரு ஆகியோரை கருப்பாயூரணி போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கவிடும் நோக்கத்தில் போலீஸார் செயல்பட்டு வருகின்றனர். எனவே, இரட்டை கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது கொலை வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட செந்தில்குமார் கைது செய்யப்படாதது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர் செந்தில் மாயமாகிவிட்டதாகவும், அவரை கண்டுபிடிக்கோரி அவர் மனைவி முருகலெட்சுமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தாக்கல் செய்த அறிக்கையில், கு்ன்னத்தூர் இரட்டை கொலை வழக்கை செல்லூர் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் விசாரித்துள்ளார். அவர் விசாரணையில் பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளார். கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த செந்தில் 2021 ஜனவரியில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையில் வரிச்சூர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
இந்த வழக்கில் நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில்: "இந்த வழக்கு விசாரணையில் உதவி காவல் ஆணையர் விஜயகுமார் பல்வேறு தவறுகள் புரிந்துள்ளார். இந்த மனு நிலுவையில் இருந்த போது முறையாக விசாரணை நடத்தாமல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். அந்தக் குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றச்சாட்டு பதிவு இன்னும் நடைபெறவில்லை.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் கூடுதல் விசாரணைக்கு உத்தரவிடலாம் என பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை கொலை வழக்கில் 28.4.2021ல் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க தென் மண்டல ஐ.ஜி சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும். அந்தக் குழு 2 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்.
செல்லூர் உதவி காவல் ஆணையர் விஜயகுமார் மீது வன்கொடுமை சட்டம் மற்றும் பிற உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். விஜயகுமார் மீது உள்துறை செயலாளர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் உதவிய தென் மண்டல ஐ.ஜி மற்றும் அவரது குழுவுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது. அவரது ஆடியோ - வீடியோ விசாரணை முறை ஏற்கப்படுகிறது. இந்த முறையை அனைத்து வழக்குகளிலும் பின்பற்ற விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.