க்ரைம்

குட்கா வியாபாரிகள் 69 பேர் சென்னையில் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க, புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை என்ற பெயரில் சென்னையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைதுசெய்ய அனைத்து காவல் நிலையஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 16-ம் தேதிமுதல் 22-ம் தேதி வரையிலான ஒருவார கால கண்காணிப்பில் குட்கா கடத்தல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடர்பாக 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 69 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்தி, பதுக்கிவைத்து விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனக் காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT