சென்னை: பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, மேற்கு சைதாப்பேட்டை, ராமசாமி தெருவில் வசித்து வருபவர் வரலட்சுமி (51). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 14-ம் தேதி பணி முடித்து சைதாப்பேட்டை, வி.வி.கோயில் தெரு, அமுதம் ரேஷன் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
தனிப்படை விசாரணை: அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வரலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்துக் கொண்டுதப்பிச் சென்றனர். அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்தார். அதன்படி, போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளை நடைபெற்ற இடத்திலிருந்து மாதவரம் வரை சுமார் 40 கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், பதிவான காட்சிகள் அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கொடுங்கையூர், காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தபாலாஜி (22), அதே பகுதி பெரியார் தெருவைச் சேர்ந்த இளந்திரையன் (23) ஆகிய இருவரை கைதுசெய்தனர்.
2 குற்ற வழக்குகள்: பின்னர், அவர்கள் நீதிமன்றகாவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட பாலாஜி மீது ஏற்கெனவே 2 குற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.