க்ரைம்

கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் ராஜஸ்தான் பயணி கைது

செய்திப்பிரிவு

கோவை: கோவை விமான நிலையத்துக்கு துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த பயணி கைது செய்யப்பட்டார்.

கோவை பீளமேடு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று புதுடெல்லிக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணிப்பதற்காக வந்த ஒரு பயணியின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர். அவர் கொண்டு வந்த கைப் பையில் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் 2 தோட்டாக்கள் இருந்தன.

அவர் முன்னுக்கு பின் முரணான பேசியதால், விமான நிலைய ஊழியர்கள் அவரை பீளமேடு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்நபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஷியாம் சிங் (42) என்பதும், திருப்பூரில் வேலை செய்து வரும் உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்ப விமான நிலையம் வந்ததும் தெரியவந்தது.

தோட்டா தனது கைப் பையில் எப்படி வந்தது எனத் தெரியாது என அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஷியாம் சிங்கை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT