க்ரைம்

76 ஆயிரம் பேரிடம் ரூ.1,016 கோடி மோசடி - கோவை நிதி நிறுவன இயக்குநரின் பெற்றோர் உட்பட மூவர் கைது

டி.ஜி.ரகுபதி

கோவை: 76 ஆயிரம் பேரிடம் ரூ.1,016 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, நிதி நிறுவன மேலாண் இயக்குநரின் பெற்றோர் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை பீளமேட்டில் யு.டி.எஸ் என்ற நிதி நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்நிதி நிறுவனத்தின் உரிமையாளர் சூலூரைச் சேர்ந்த ரமேஷ்(30) ஆவார். இந்நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, அதிக வட்டி தரப்படும் என 4 பிரிவுகளின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதை நம்பி கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள், கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால், சில மாதங்கள் மட்டும் முதலீட்டுத் தொகையை அளித்துவிட்டு அதன் பின்னர் முதலீட்டுத் தொகையையும், கூறியபடி லாபத் தொகையையும் இந்நிறுவனத்தினர் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு (சிறப்புப் பிரிவு ) போலீஸில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் விசாரித்த போது, மேற்கண்ட நிதி நிறுவனத்தினர் கிட்டத்தட்ட 76 ஆயிரம் பேரிடம் ரூ.1,016 கோடி வரை வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.

வழக்குப்பதிவு: இந்த வழக்கு தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு (சிறப்புப் பிரிவு) போலீஸார் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸாரிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையில் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீஸார் மேற்கண்ட மோசடி தொடர்பான வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக, யு.டி.எஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ரமேஷ் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் வெளியே வந்த அவர், பிணைக்கான நிபந்தனையை மீறியதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல், அவருடன் ஜஸ்கர், குமார், கனகராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், இவர்கள் மூவரும் பிணையில் வெளியே வந்தனர். ரமேஷ் மட்டும் சிறையில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை தேடி வந்தனர்.

மூவர் கைது: இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘இவ்வழக்கு தொடர்பாக ரமேஷின் தந்தையான சூலூரைச் சேர்ந்த கோவிந்தசாமி(66), தாயார் லட்சுமி(56), அரசுப் பள்ளி ஆசிரியரான திருச்சியைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகர்(43) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் யுடிஎஸ் நிறுவனத்தின் திருச்சி கிளையை நடத்தி வந்து பலரிடம் பணத்தை வசூலித்துள்ளார். ரமேஷ் மோசடி செய்த தொகையை பயன்படுத்தி நிறுவனங்களைத் தொடங்கியும்,

அதில் அவரது பெற்றோர் கோவிந்தசாமி, லட்சுமி ஆகியோர் சில பதவிகளிலும் இருந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் இதுவரை புகார் அளித்துள்ளனர். இந்நிதி நிறுவனத்தின் 36-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ரூ.102 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT