திருப்பத்தூர்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.48 லட்சம் மோசடி செய்த நபரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம் நாயன செருவு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பாபு. இவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பன் நகரைச் சேர்ந்த அப்துல் ரஹீம் (58) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாபு வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்ய முயற்சி செய்துவந்தார்.
இதையறிந்த அப்துல் ரஹீம், நான் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருகிறேன். அதற்காக, ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் தர வேண்டும் என பாபுவிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய பாபு மற்றும் நாட்றாம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கமலநாதன் ஆகிய இருவரும் தலா ரூ.1 லட்சம் பணத்தை அப்துல்ரஹீமிடம் கொடுத்துள்ளனர்.
பணத்தை பெற்ற அப்துல்ரஹீம் 2 பேரை மட்டும் வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாது. எனவே, உங்களுக்கு தெரிந்த நண்பர்களையும் அழைத்து வாருங்கள் என கூறியுள்ளார். இதையடுத்து, இருவரும் நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 46 பேரை அழைத்து வந்துள்ளனர்.
அதன்படி, 46 பேர் மற்றும் கமலநாதன், பாபு உடட்பட 48 பேரிடமும் தலா 1 லட்சம் என ரூ.48 லட்சத்தை அப்துல் ரஹீம் பெற்றுக்கொண்டு பல மாதங்கள் கடந்தும் வேலை வாங்கித்தரவில்லை. இதன் பிறகு தான் அப்துல் ரஹீம் தங்களை ஏமாற்றியதை உணர்ந்து ஏமாற்றப்பட்டவர்கள் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில், குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறியது மட்டும் அல்லாமல் போலியான பாஸ்போர்ட், விசா தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
காவல் துறையினர் விசாரணை: அவரை, காவல் துறையினர் தேடி வந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கியிருப்பது திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தெரியவந்தது. அதன்பேரில், பெங்களூருவுக்கு விரைந்து சென்ற மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் அங்கு அப்துல் ரஹீமை கைது செய்து, திருப்பத்தூர் மாவட்டத்துக்கு அழைத்து வந்து நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த நபர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். அவர்கள், பிடிபட்டால் தமிழகம் முழுவதும் எத்தனை பேரிடம் இந்த கும்பல் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவரும்.