சென்னை: 85 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இறந்து விட்டதாக அவர்களின் பெயரில் போலியாக இறப்பு சான்றிதழ் கொடுத்து எல்ஐசி இன்சூரன்ஸ் தொகை ரூ.18 லட்சத்தை மோசடி செய்த பெண் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த அமுதா (66) அப்பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்களை ஏற்படுத்தி, உறுப்பினர்களை எல்ஐசியில் ஓராண்டுக்கான குழு இன்சூரன்ஸ் மாஸ்டர் பாலிசி திட்டத்தில் சேர்த்துள்ளார்.
பின்னர் அவர் இந்தக் குழுவின்தலைவராக இருந்தபோது 85 உறுப்பினர்கள் இறந்துவிட்டதாக, போலி இறப்பு சான்றிதழ் கொடுத்து எல்ஐசியில் இருந்து ரூ.18.10 லட்சம் பெற்றுள்ளார். இந்த மோசடி தொடர்பாக அமுதா உள்ளிட்ட 4 பேர் மீதும்போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி அமுதா சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நடந்தது.
அப்போது அரசு தரப்பில், அமுதாவுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது அதையடுத்து அமுதாவின் முன்ஜாமீன் மனுவை, நீதிபதி எஸ்.அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.