க்ரைம்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி துணிகரம்: குற்றாலம் அருவியில் குளித்தபோது 6 பெண்களிடம் நகை திருட்டு

செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளித்த 6 பெண்களிடம் நேற்று நகைகள் திருடப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றாலத்தில் சாரல் சீசன் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. விடுமுறை தினமான நேற்று கூட்டம் அலைமோதியது. ஆனால் அருவிகளில் தண்ணீர் குறைவாகவே விழுந்தது.

கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தபோது சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்றும், மிதமான அளவில் இருந்தபோது மொத்தமாகவும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பிரதான அருவியில் குளித்த பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைகள் திருடப்பட்டுள்ளன.

120 கிராம் நகை திருட்டு: பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வளர்மதி (58), சரோஜா (70), வனஜோதி (60), சென்னையை சேர்ந்த பரமேஸ்வரி (58), திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த அய்யம்மாள் (31) உட்பட 6 பெண்களிடம் நேற்று சுமார் 120 கிராம் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் குற்றாலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் தொடர் எச்சரிக்கை: குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடமும், குறிப்பாக அருவியில் குளிக்கச் செல்லும் பெண்களிடமும் நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி உள்ளூர் போலீஸார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அப்படியிருந்தும் நேற்று ஒரே நாளில் சுற்றுலா வந்த 6 பெண்களிடம் நகைகள் திருடப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT