சென்னை: ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார் (24). கார் ஓட்டுநர். இவரிடம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர் எனக் கூறி சஞ்சய் சர்மா (44) என்பவர் வாடகைக்கு கார் முன்பதிவு செய்து, ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறக்கிவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, சஞ்சய் சர்மாவை காரில் அழைத்து சென்ற போது, தினேஷ்குமாரை, சஞ்சய் சர்மா கோடம்பாக்கத்தில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட அழைத்துச் சென்றார். அங்கு சஞ்சய் சர்மா மது அருந்தினார். அப்போது தினேஷ் குமாரிடம் அவசர தேவை என்றுக் கூறி ‘கூகுள் பே’ மூலம் ரூ.8 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். பின்னர் தனது செல்போனில் ‘சார்ஜ்’ இல்லை என்று கூறி தினேஷ் குமாரின் செல்போனை வாங்கினார்.
வெளியே சென்று பேசிவிட்டு வருவதாக சென்றவர் திரும்பி வரவில்லை. பணம் மற்றும் செல்போனை பறிகொடுத்த தினேஷ் குமார், கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். இதையடுத்து கோடம்பாக்கம் போலீஸார் அந்த பாரில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தியதில், அவர் விருகம்பாக்கம் சித்திரை தெரு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவரை போலீஸார் கைது செய்து நடத்திய விசாரணையில், இவர் இதே பாணியில் கோயம்பேடு பகுதியில் கடந்த மாதம் கார் ஓட்டுநர் ஒருவரிடம் மருத்துவர் என்று கூறி கார் வாடகைக்கு கள்ள நோட்டு கொடுத்து பணம், செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது. மேலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர் போல் நடித்து சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் 6 பவுன் நகைகளை திருடி சென்றதும் தெரியவந்தது. இதேபோல், வேறு எங்கெல்லாம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.