சென்னை: சென்னை தி.நகர், சாம்பசிவம் தெருவைச் சேர்ந்தவர் மனோ கரன். இவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘‘வேளச்சேரி, ஏஜிஎஸ் காலனி 10-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ரவீந்திரன் (50) என்பவர் எல்ஐசியில் முகவராக இருந்தார். அவர் மூலம் 2013-ம் ஆண்டுமுதல் எல்ஐசி பாலிசி எடுத்து பிரீமியம் தொகையை எல்ஐசியில் செலுத்தி வந்தேன்.
இந்நிலையில், 2020 கரோனா காலகட்டத்தில் நேரடியாக அவரது வங்கிக் கணக்குக்கு பணத்தை செலுத்தச் சொன்னார். தானே அதை எல்ஐசியில்கட்டிவிடுவதாகக் கூறினார்.
இதை நம்பி நான் ரவீந்திரன் வங்கிக் கணக்குக்கு பணத்தை தொடர்ந்து அனுப்பினேன். ஆனால், அவர் உறுதி அளித்தபடி எல்ஐசியில்செலுத்தாமல், செலுத்தியதுபோல் போலி ரசீதை என்னிடம் காண்பித்தார்.
மேலும், எனது கையெ ழுத்தை போலியாக போட்டு எனது பெயரில் உள்ள எல்ஐசியில் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார். இப்படி,என்னிடம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 83 ஆயிரம் ஏமாற்றினார். எனவே, ரவீந்திரன் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பண மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரவீந்திரனை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஐ பேட், 3 லேப்டாப்,போலி எல்ஐசி ரசீது உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.