சென்னை: சென்னை மதுரவாயல், கிருஷ்ணா நகர் 15-வது தெருவில் பிரபல சின்னத்திரை நட்சத்திர ஜோடியான நடிகர் ராஜ்கமல், நடிகை லதா ராவ் ஆகியோருக்கு சொந்தமான சூட்டிங் பங்களா உள்ளது. கடந்த 9-ம் தேதி இந்த பங்களாவுக்குள் நுழைந்த திருடர்கள் விலை உயர்ந்த டிவி, மின் மோட்டார் உட்பட சில பொருட்களை திருடிச் சென்றனர். இவர்களது வீட்டுக்கு அடுத்த வீடான பாஜக பிரமுகர் பொன்.பிரபாகர் என்பவரின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் அதே நாளில் திருடப்பட்டது.
இது தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதன் அடிப்படையில் 2 வீடுகளில் திருட்டில் ஈடுபட்டது பாரிமுனை அருகே கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த காஜா மொய்னுதீன் (38), திருவொற்றியூரைச் சேர்ந்த அமீனுதீன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஏற்கனவே திருடப்பட்ட பொருட்கள் மற்றும் கார் மீட்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.