க்ரைம்

பண மோசடி வழக்கு: திரைப்பட தயாரிப்பாளர் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்

செய்திப்பிரிவு

சென்னை: பண மோசடி வழக்கு தொடர்பாக சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் விசாரணைக்கு நேற்று போலீஸில் ஆஜரானார்.

சினிமா பட தயாரிப்பாளரும்லிப்ரா புரொடக்‌ஷன் உரிமையாளருமாக இருப்பவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த பிறகு சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் ரவீந்தர் மீது அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பண மோசடி புகார் ஒன்றை அளித்தார்.

அதில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமான ரவீந்தர், கடந்தமே மாதம் 8-ம் தேதி நடிகர் ஒருவருக்கு முன்பணம் கொடுக்கவேண்டும் எனக்கூறி ரூ.20 லட்சம் கேட்டதாகவும், தன்னிடம் இருந்த ரூ.15 லட்சத்தை அவரதுநிறுவனத்தின் வங்கி கணக்குக்கு அனுப்பியதாகவும், தற்போது, அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல், அலைகழிப்பதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக மத்தியகுற்றப்பிரிவு போலீஸார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ரவீந்தருக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ரவீந்தர் ஆஜராகினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது நேரில் வர வேண்டும் என போலீஸார் அவரிடம் தெரிவித்து, அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT