சென்னை: லண்டனில் இருந்து பரிசுப் பொருட்கள் அனுப்புவதாகக் கூறி, ரூ.1.22 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஒருவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் இளம் பெண் ஒருவர் அறிமுகமானார். அந்தப் பெண், தான் லண்டனைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரிடம் பேச ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து, இருவரும் சமூக வலைதளம் மூலம் நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த இளம் பெண், நட்பைமேலும் தொடருவதற்காக, லண்டனில் இருந்துபரிசுப் பொருட்களை அனுப்ப இருப்பதாகவும், அதற்காக வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களையும் அந்த நபரிடம் பெற்றுள்ளார்.இதையடுத்து, பரிசுப் பொருட்களை கூரியரில்அனுப்பி இருப்பதாகவும், அதற்கான வரி மற்றும் சுங்கக் கட்டணம் போன்றவைகள் செலுத்த வேண்டும் என்று கூறி, அந்த நபரிடம் ரூ.1,22,840-ஐ பெற்றுள்ளார்.
பணம் பெற்று 2 நாட்களுக்கு மேலாகியும்பரிசுப் பொருட்கள் வராததால், அப்பெண்ணைசெல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அந்தப் பெண்ணை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர், இதுகுறித்து சென்னை சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கு,செல்போன் எண், சமூகவலைதள பக்கம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து, விசாரணைநடத்தினர். விசாரணையில், அந்த நபரிடம்மோசடி செய்தவர்கள், ஹரியாணா மாநிலம்பரிதாபாத்தில் இருந்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீஸார் ஹரியாணா சென்று, அங்கு பதுங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஹ்யூகோ பிரான்சிஸ்கோ (40), துரு கிளிண்டன்(27) மற்றும் இவரது மனைவி மணிப்பூர் தபிதா அனல்(32) ஆகியோரைக் கைது செய்து, மோசடிக்குப் பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.