சென்னை: ஓடும் ரயிலில் இளம்பெண்ணிடம் செல்போனை பறித்தபோது, தவறி கீழே விழுந்த இளம்பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கந்தன்சாவடியை சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மகள் ப்ரீத்தி (22). இவர் கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தினமும், கோட்டூர்புரத்தில் உள்ள அலுவலகத்துக்கு திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இருந்து பறக்கும் ரயிலில் சென்று வருவதை ப்ரீத்தி வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மாலை அலுவலகத்தில் வேலை முடித்துவிட்டு, கோட்டூபுரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவான்மியூர் நிலையத்துக்கு பறக்கும் ரயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது, இந்திரா நகர் ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து இறங்கும் போது, நடை மேடையில் தவறி விழுந்த, ப்ரீத்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக, ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, ப்ரீத்தி தவறி விழுந்து காயமடைந்ததாக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, ப்ரீத்தியின் தந்தை தனது மகளின் செல்போனை காணவில்லை என போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, சைபர் கிரைம் மூலமாக செல்போனை கண்டுபிடித்த போலீஸார், அதை வைத்திருந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
தலையில் பலத்த காயம்: விசாரணையில், ‘இந்திரா நகர் ரயில் நிலையத்தில் இருந்துரயில் புறப்படும்போது, ப்ரீத்தியிடம் இருந்த செல்போனை 2 பேர் பறித்துவிட்டு தப்பி ஓடினர். அப்போது, ப்ரீத்தி நிலைதடுமாறி ஓடும் ரயிலில் இருந்து கீழே நடைமேடையில் விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது’ விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ப்ரீத்தி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, ப்ரீத்தியிடம் இருந்து செல்போனை பறித்து தப்பி ஓடிய அடையாறு பகுதியை சேர்ந்த மணி மாறன் (19), பட்டினப் பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (27) ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.