க்ரைம்

நர்சிங் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: சீவலப்பேரியில் தந்தை, மகன் கைது

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் சீவலப்பேரியைச் சேர்ந்த இளைஞரும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், நாகர்கோவிலில் தங்கி நர்சிங் படித்து வருகிறார். இவருக்கும், திருநெல்வேலி அருகே சீவலப்பேரி மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (25) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது.

குமரி மாவட்டம் மண்டைக் காட்டில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி, படகு கட்டும் கூடத்தில் சிவகுமார் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 2-ம் தேதி சிவகுமார், தனது சகோதரியின் குழந்தைக்கு பிறந்த நாள் எனக் கூறி, நர்சிங் மாணவியை மண்டைக் காட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளார். பின்னர், அவரை சிவகுமார் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து குளச்சல் மகளிர் போலீஸில் மாணவி புகார் செய்தார். அதன் பேரில் சிவகுமார், அவரது தந்தை பால் ராஜ் (55) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சீவலப்பேரியில் வைத்து இருவரையும் போலீஸார் கைது செய்து, இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் நாகர்கோவில் கிளை சிறைச் சாலையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT