கும்பகோணம்; புவனேஸ்வர் - ராமேஸ்வரம் விரைவு ரயிலில் இருந்த 5 கிலோ புகையிலை பொட்டலத்தை கும்பகோணம் ரயில்வே இருப்புப் பாதை போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.
திருச்சி இருப்புப்பாதை கஞ்சா தடுப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் டி.சிவராமன் மற்றும் போலீஸார் வழக்கம் போல் புவனேஸ்வரத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ரயிலை, ஆடுதுறை - கும்பகோணத்திற்கு இடையே சோதனையிட்டனர்.
அப்போது, ரயிலின் பின்பகுதியில், முன்பதிவில்லாத பயணிகள் பெட்டியின் கழிவறை அருகில் 2 வெள்ளை நிறத்திலுள்ள சாக்கு மூட்டை இருந்தது. சந்தேகமடைந்த போலீஸார், இந்த மூட்டைகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது, யாரும் பதில் கூறாததால், அந்த மூட்டைகளை கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறங்கிச் சோதனையிட்டனர்.
பாரதி என இந்தி மொழியில் அச்சிடப்பட்டிருந்த மூட்டையில் 400 கிராம் எடைகொண்ட 129 பொட்டலம் என மொத்தம் 50 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சமாகும். பின்னர், இதனைக் கும்பகோணம் உணவு பாதுகாப்பு அலுவலர் சசிகுமாரிடம், போலீஸார் ஒப்படைத்தனர்.