க்ரைம்

இந்திய நர்சிங் மாணவி உயிருடன் புதைத்து கொலை: ஆஸ்திரேலியாவில் காதலன் கைது

செய்திப்பிரிவு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் அடிலய்டு நகரைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் கவுர் (21). நர்சிங் மாணவியான இவரை தரிக்ஜோத் சிங் என்பவர் காதலித்து வந்தார்.

இவர்களுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, ஜாஸ்மின் கவுரை அவர் பணிபுரியும் இடத்திலிருந்து 650 கி.மீ. தூரத்தில் உள்ள பிளிண்டர்ஸ் ரேஞ்ச் மலைப் பகுதிக்கு காரில் கடத்தி சென்றுள்ளார்.

பின்னர் ஜாஸ்மினின் கை மற்றும் கால்களை கேபிள்களால் கட்டி, கழுத்துப் பகுதியில் வெட்டி உயிருடன் அவரை மண்ணுக்குள் புதைத்துள்ளார். இதையடுத்து, மூச்சு திணறல் ஏற்பட்டு ஜாஸ்மின் உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தன் மீதான குற்றச்சாட்டுகளை சிங் ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து அரசுதரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “உறவில் விரிசல் ஏற்பட்டதை தாங்க முடியாததால் ஜாஸ்மின் கவுரை அவரது ஆண் நண்பர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். அவர் கொல்லப்பட்ட விதம் அசாதாரணமானது.

முதலில் கவுர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதனால் அவரை புதைத்துவிட்டதாகவும் கூறிவந்த அவர் பின்னர் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார். கொலை செய்வதற்கு முன்பாக, கையுறை, மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களை சிங் வாங்கும்போது கிடைத்த சிசிடிவி பதிவு இந்த வழக்கில் முக்கிய தடயமாக அமைந்தது. சிங் ஆயுள் தண்டனையை எதிர்கொண்டுள்ளார்” என்றார்.

SCROLL FOR NEXT