செங்கல்பட்டு: தாம்பரம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (31). இவர் மீது தாம்பரம், பீர்க்கன்காரணை, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, அடிதடி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு இரும்புலியூரில் பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக லோகேஷ் உள்ளார். இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் நேற்று நீதிமன்ற விசாரணைக்கு சாட்சி சொல்ல வந்துள்ளார். விசாரணைக்கு முன்பு நீதிமன்ற வளாகம் அருகே உள்ள டீக்கடை பகுதிக்கு லோகேஷ் வந்தபோது திடீரென அங்கு 3 இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் இரண்டு நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளது. இதில் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். இதில் தப்பித்து ஓடிய லோகேஷை அந்த கும்பல் விரட்டி பிடித்து வெட்டிவிட்டு தப்பியது.
தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் பரத் தலைமையிலான போலீஸார், ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லோகேஷை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். காஞ்சிபுரம் சரக காவல்துறை தலைவர் பகலவன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரனீத் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சி மோப்ப நாய் பிரிவிலிருந்து டைகர் (டி.எஸ்.பி.கிரேடு)கொண்டு வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. செங்கை தாலுகா போலீஸார் தனிப்படை அமைத்து 7 பேரை தேடி வருகின்றனர்.