வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தோப்புலகுண்டா ஜடான்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சக்கரவர்த்தி (45). இவரது மகன் சூரியபிரகாஷ் (13). இவர், நாட்றாம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் சென்ற சிறுவன் சூரிய பிரகாஷ், காய்ச்சல் காரணமாக வீடு திரும்பினார். இதையடுத்து, நாயனசெருவு பகுதியில் கிளினிக் நடத்தி வந்த, திருப்பத்தூர் தில்லை நகரைச் சேர்ந்த கோபிநாத் (38) என்பவரிடம், சூரியபிரகாஷை அழைத்துச் சென்றார் சக்கரவர்த்தி.
அவர் பரிசோதனை செய்து,காய்ச்சல் அதிகமாக உள்ளதாகக் கூறி, ஊசி மூலம் மருந்து செலுத்தி உள்ளார். பின்னர், சக்கரவர்த்தி மகனை அழைத்துக்கொண்டு, வீடு திரும்பினார். வீடு திரும்பிய சிறிது நேரத்தில் சூரியபிரகாஷுக்கு காய்ச்சல் அதிகரித்து, மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், சூரிய பிரகாஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீஸார் சிறுவனின் சடலத்தை மீட்டு, பிரேதபி பரிசோதனைக்காக நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சக்கரவர்த்தி அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்ட போலீஸார், கோபிநாத்திடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கோபிநாத் முறையான மருத்துவம் படிக்காமலேயே, அந்தப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலி மருத்துவர் கோபிநாத்தை போலீஸார் நேற்று கைது செய்தனர்.