திருப்பூர்: திருப்பூரில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் 2 பேர், ரயில் மோதி உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் பாண்டியன் (23), விஜய் (24). திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் குடியிருந்து வந்தனர். அப்பகுதியில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பணியாற்றி வந்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால், இவர்கள் இருவரும் ரயில் முன் செல்ஃபி எடுத்து அனுப்புவதாக சக நண்பர்களிடம் கூறிச்சென்றனர். திருப்பூர் அணைப்பாளையம் பகுதிக்கு மதுபோதையில் வந்த இருவரும் தண்டவாளம் அருகே நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே வேகமாக வந்த எர்ணாகுளம்- பிலாஸ்பூர் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.