எலவனாசூர்கோட்டை ஊராட்சி பெத்தநாயக்கன்பாளையம் ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளிச் சென்றனர். வாகன விதிமுறைகளுக்கு மாறாக பதிவெண் இல்லாத டிராக்டரை சிறுவன் ஓட்டிச் சென்றான். 
க்ரைம்

கள்ளக்குறிச்சியில் வட்டாட்சியர்கள் துணையோடு ஏரி மண் கடத்தல்? - ஆட்சியரிடம் சிக்கிய வாகனங்கள்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் துணையோடு ஏரி மண் கடத்தப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், விவசாயிகள் தங்கள் விளைநிலத்தின் மண் வளத்தை பெருக்கவும் நீர்நிலைகளை தூர்வாரும் வகையில் வண்டல் மண் எடுத்து பயன்படுத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள ஆவணங்களை சமர்ப்பித்து கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று மண் அள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

அவ்வாறு மண் அள்ள வழங்கப்பட்டுள்ள அனுமதி சீட்டில் எந்த நீர்நிலை, எந்த தினத்தில், எவ்வுளவு நடை, மண் அள்ள பயன்படுத்தும் வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்டவை குறிப்பிட்டு அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு அனுமதி பெறும் விவசாயிகளில் ஒரு சிலர் மட்டுமே விளைநிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

பெரும்பாலும் விவசாயிகள் பெயரில் அனுமதி பெற்றுவிட்டு, மண் விற்பனை நடைபெறுவது தான் நடந்து வருகிறது. அதுவும் ஒருமுறை பெற்ற அனுமதியைக் கொண்டு, மாதம் முழுவதும் மண்வெட்டி எடுப்பதோடு, அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் தவிர கூடுதல் வாகனங்களையும் பயன்படுத்தி மண் கொள்ளை நடந்து வருகிறது.

மேலும், உளுந்தூர்பேட்டை வட்டத்துக்குட்பட்ட கீழப்பாளையம் ஏரியில் மண் அள்ள அனுமதி பெற்று பெத்தநாயக்கன்பாளையம் கிராம ஏரியில் மண் வெட்டி எடுக்கப்படும் சம்பவம் நடைபெறுகிறது. இவற்றை கண்காணிக்க வேண்டிய வட்ட வருவாய் ஆய்வாளரும், கிராம நிர்வாக அலுவலர்களும், வட்டாட்சியர்களும் மண் கொள்ளையர்களுக்கு உடந்தையாக செயல்படுவதாக எலவனாசூர்கோட்டை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் சின்னசேலம் அடுத்த வடபொன்பரப்பியில் உள்ள கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது இரவு 7 மணியளவில் சின்னசேலம் ஏரிக்கரை பகுதியில் இருந்து லாரி ஒன்று மண் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இதைக்கண்ட ஆட்சியர், லாரியை நிறுத்தி விசாரித்தபோது அனுமதியின்றி மண் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து சின்னசேலம் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கிடையில் லாரி உரிமையாளர் சதீஷ் சம்பவ இடத்துக்கு வந்து ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் லாரி ஓட்டுநர் கணேசன் (26) மற்றும் சதீஷ் ஆகியோரை சின்னசேலம் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT