நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு சிற்றாற்றின் கரையைச் சேர்ந்தவர் ரசல்ராஜ் (49). இவரைபுதுக்கடை அருகேயுள்ள மாராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயன் பிரபு (39) என்பவர் அணுகி, மத்திய அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.
இதை நம்பிய ரசல்ராஜ், பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த டெய்சி செல்லதுரை, திக்கணங்கோடு எபிரேம், தொழிக்கோடு அருண்குமார் ஆகியோரை, ஜெயன் பிரபுவுக்கு அறிமுகம் செய்துள்ளார். இவர்களிடம் இருந்து ரூ.57 லட்சத்தை ஜெயன் பிரபு பெற்றுள்ளார்.
பின்னர், மத்திய அரசு வேலை உத்தரவைப் போல போலியான உத்தரவை தயார் செய்து, எபிரேம் என்பவருக்கு கான்பூர் ரயில்வேயிலும், டெய்சி செல்லதுரை, அருண்குமார் ஆகியோருக்கு ஹைதராபாத் வருமான வரித் துறையிலும் வேலை கிடைத்ததாகக் கூறி, அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் சில நாட்கள் கழித்து, அவர்களை வேலையில் இருந்து திருப்பி அனுப்பிவிட்டதாக நாடகமாடியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகமடைந்து விசாரித்ததில், போலி அரசு ஆணை தயார் செய்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மூவரும் குமரி மாவட்ட எஸ்.பி. ஹரிகிரன் பிரசாந்திடம் புகார் செய்தனர். எஸ்.பி. உத்தரவின் பேரில் புதுக்கடை போலீஸார் நடத்திய விசாரணையில், மத்திய அரசுவேலை உத்தரவை போலியாக தயார் செய்ததும், போலியான இடத்தில் வேலைக்கு அமர்த்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து ஜெயன் பிரபு, அவரது சகோதரி ரதி மீனா (26), தாய் ரத்தின பாய், சென்னை சாய்பிரசாத், இன்பா ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்து, ஜெயன்பிரபுவை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.