திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த தம்பதி தெய்வசிகாமணி, யசோதா. இவர்களது மகன்கள் சுரேஷ் (25), தினேஷ்குமார் (20). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தெய்வ சிகாமணியும், 2 ஆண்டுக்கு முன்பு யசோதாவும் இறந்துவிட்டனர்.
இதையடுத்து, குமார் நகர் மிலிட்டரி காலனியிலுள்ள பாட்டி வள்ளியம்மாளுடன் (65), சுரேஷ் மற்றும் தினேஷ்குமார் வசித்து வந்தனர். மேலும், அப்பகுதியிலுள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. போதைக்கு அடிமையானதால், தினேஷ்குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் தினேஷ்குமார் மது அருந்த வள்ளியம்மாளிடம் பணம் கேட்டுள்ளார். அவர் அளிக்காததால் மன உளைச்சல் மற்றும் கோபமடைந்த தினேஷ்குமார், வீட்டை தீ வைத்து கொளுத்தியுள்ளார். தொடர்ந்து, தானும் தற்கொலை செய்து கொள்வதாக எரிந்துகொண்டிருந்த வீட்டின் அறைக்கு சென்று உள்புறமாக தாழிட்டுக் கொண்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த வள்ளியம்மாள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வடக்கு போலீஸார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார். அவர்கள் சென்று தீயை அணைத்து, தற்கொலைக்கு முயன்ற தினேஷ்குமாரையும் மீட்டனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரித்தனர்.
அதில், போதை பழக்கத்துக்கு அடிமையான பேரன் தினேஷ்குமாருக்கு மது அருந்த பணம் கொடுக்க பாட்டி மறுத்ததால், வீட்டுக்கு தீ வைத்து தானும் தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.