க்ரைம்

வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து வீட்டுக்கடன் பெற்று ரூ.1 கோடி மோசடி: சென்னையில் கணவன் - மனைவி உள்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: போலி ஆவணங்கள் கொடுத்து, வங்கியில் வீட்டுக்கடன் பெற்று ரூ.1 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததாக கணவன், மனைவி உட்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் சேதுராமன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதில், “சென்னை நங்கநல்லூர் டெலிகிராப் காலனியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (49), மேடவாக்கம் பாபுநகர், 3-வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (51), அவரது மனைவி முத்துலட்சுமி (46) ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் வீட்டுக் கடன் பெற்று ரூ.1 கோடிக்கு மேல் ஏமாற்றி விட்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் வீட்டுக் கடன் பெற்று மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளான 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “கைதான ஜெகநாதன், முத்துலட்சுமி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் இதேபோன்று ஒவ்வொருவர் பெயரிலும் மாற்றி மாற்றி ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளுக்கு புதிதாக கட்டுவதைப் போல் கட்டுமான ஒப்பந்தம் தயார் செய்தும் டிடிசிபி (DTCP) பிளான் அப்ரூவல்களை போலியாக தயார் செய்தும் பாரத ஸ்டேட் வங்கியின் வெவ்வேறு கிளைகளில் வீட்டுக் கடன்களை பெற்றுள்ளனர்.

கடன் பெற்ற வீடுகளை முழுவதும் முடிக்காமல் வங்கியை ஏமாற்றி தலைமறைவாகி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஜெகநாதன் மீது எஸ்ஆர்எம்சி காவல் நிலையத்திலும், இதேபோல் வீட்டுக் கடன் வாங்கிய புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT