க்ரைம்

கிருஷ்ணகிரி ஜெகன் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என மகளை மிரட்டிய தாய் உட்பட 2 பேர் கைது

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கக் கூடாது என மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தாய் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி, கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஜெகனை, சரண்யாவின் தந்தை சங்கர் உட்பட 3 பேர் வழிமறித்து வெட்டிக் கொலை செய்தனர். இக்கொலை வழக்கில் பெண்ணின் தந்தை சங்கர் உட்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது சரண்யா தனது கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 26-ம் தேதி மாலை சரண்யா வீட்டில் இருந்தபோது, அவரது தாய் ரத்தினம்மாள் (38) மற்றும் 3 பேர் அங்கு சென்றனர். அப்போது, சரண்யாவிடம் ஜெகன் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க கூடாது என மிரட்டி தாக்கினர்.

இது தொடர்பாக சரண்யா, கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், ரத்தினம்மாள் (38), இவரது உறவினரான சுண்டேகுப்பம் அருகே உள்ள பாறை கொட்டாயை சேர்ந்த பொன்மணி (34) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT