கோவை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று (ஜூன் 27) தீர்ப்பளித்துள்ளது.
கோவை பி.என்.புதூர், ஆனந்தா நகரைச் சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியம் (42). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் சட்ட ஆலோசகராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இடையில் வெளிநாடு சென்று திரும்பிய பிறகு, தனியார் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த 14 வயது சிறுமி படித்த பள்ளியிலும் ஆங்கில பேச்சுப் பயிற்சி அளித்துள்ளார்.
அப்போது, பழக்கம் ஏற்பட்டு, செல்போன் மூலம் சிறுமியிடம் சங்கர சுப்பிரமணியம் பேசி வந்துள்ளார். மாணவி தந்தை குடிப் பழக்கம் உள்ளவர் என்பதையும், குடும்ப வறுமையையும் அறிந்த சங்கர சுப்பிரமணியம், சிறுமிக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார். சிறுமியின் வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்து, அவ்வப்போது பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். கடந்த 2019 ஜூன் 8-ம் தேதி சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற சங்கர சுப்பிரமணியம், அங்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானப்படுவோம் என்று கருதிய பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் விட்டுவிட்டனர்.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு சிறுமியை வேறொரு பள்ளியில் பெற்றோர் சேர்த்தனர். தகவல் அறிந்து அங்கும் பணியில் சேர சங்கர சுப்பிரமணியம் முயன்றுள்ளார். இவ்வாறு அவர் பின்தொடர்வதை அறிந்த சிறுமி, மாவட்ட குழந்தைகள் நலக் குழு மூலம் 2019 டிசம்பர் 5-ம் தேதி கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் (போக்சோ) வழக்குப் பதிவு செய்து சங்கர சுப்பிரமணியத்தை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜி.குலசேகரன் இன்று (ஜூன் 27) தீர்ப்பளித்தார். அதில், சங்கர சுப்பிரமணியத்துக்கு ஆயுள் சிறை தண்டனை, மொத்தம் ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சத்தை அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.