ஆவடி: ஹவாலா பணப்பரிவர்த்தனை மூலம்கஞ்சா வாங்கி கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த முயன்றது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா, ரூ.7.50 லட்சம் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயலை சேர்ந்த மதன் மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த பாபு கங்காராம் ஆகியோர் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது ஹாரிஸ் மூலமாக சவுகார்பேட்டையைச் சேர்ந்த, ஹவாலா ஏஜென்ட் சீதாராம் கோத்த ராவ் மூலமாக பணப் பரிவர்த்தனை செய்து, ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை பெற்று அதை புதுக்கோட்டையை சேர்ந்த ஜீவா, ஆரோக்கிய அஜின் ஆகியோர் மூலம் பைபர் படகில் இலங்கைக்கு கடத்த இருந்தனர்.
இது குறித்து காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆவடி காவல்ஆணையாளர் அருண் உத்தரவின்படி, அம்பத்தூர் உதவி ஆணையர் கிரி மற்றும் அம்பத்தூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் அலமேலு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படையினர், கடந்த 22-ம் தேதி, அம்பத்தூர் - கள்ளிக்குப்பம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த வாகனத்தில், சுமார் 3 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் பணம் ரூ.4 லட்சம் இருந்தது. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த அம்பத்தூர் போலீஸார் கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்ததோடு, வாகனத்தில் இருந்த மதன், பாபு கங்காராம் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
இதன் அடிப்படையில் முகமது ஹாரிஸ், சீதாராம் கோத்தராவ் ஆகியோரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ. 3 லட்சம் மற்றும் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல்செய்தனர். மேலும் அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புதுக்கோட்டையை சேர்ந்த ஜீவா, ஆரோக்கிய அஜின் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றினர்.
இவ்வாறு 5 கிலோ கஞ்சா, ரூ.7.50 லட்சம் ஹவாலா பணம், நான்கு சக்கர வாகனங்கள் 2 மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பாபு, முகமது ஹாரிஸ்,சீதாராம் கோத்தராவ், ஜீவா உள்ளிட்ட 7 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.