திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி லட்சுமி. இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். இவர்களது மகள் பிரகதீஸ்வரி (18), நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் கலை- அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று வீட்டருகே உள்ள குளத்தில் பிரகதீஸ்வரி குளித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த டிராக்டர், சாலையோர மின் கம்பத்தில் மோதியதில், மின் கம்பி அறுந்து குளத்தில் விழுந்தது. இதில், குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பிரகதீஸ்வரி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
நீண்ட நேரமாகியும் பிரகதீஸ்வரி வீடு திரும்பாததால், அவரைத் தேடிச் சென்ற போது குளத்தில் அவர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து ஆலிவலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மின்கம்பத்தின் மீது டிராக்டரை மோதிய ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.