க்ரைம்

சென்னை | சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பண மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் வணிகம்

செய்திப்பிரிவு

சென்னை: பிரபல சினிமா தயாரிப்பு நிறுவன பெயரை பயன்படுத்தி, சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர்களை தேனாம்பேட்டை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை தி.நகர் பிரகாசம் சாலையில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் பெயரில் அண்மையில் விளம்பரம் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அதில், சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு பெற்றுத்தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை நம்பி பல இளைஞர்கள், இளம்பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டுள்ளது. விளம்பரத்தை நம்பி துணை நடிகர்கள், நடிகைகள் சிலரும் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்து பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணத்தை கொடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் தி.நகரில் உள்ள தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளனர்.

அப்போது தான் தங்களது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பண மோசடி நடைபெற்றிருப்பது அவர்களுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தேனாம்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT