திருவள்ளூர்: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான, ‘பிரிவோம் சந்திப்போம்,’ ’சரவணன் மீனாட்சி’ போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மேலும், தற்போது பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
ரட்சிதா மகாலட்சுமி, தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னை, போரூர் அருகே அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தற்போது தனித் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ரட்சிதா மகாலட்சுமி மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், “தினேஷை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக தினேஷ், என் மொபைல் போனுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புகிறார்; மொபைல் போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், தினேஷை விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து, காவல் நிலையம் வந்த தினேஷ், ரட்சிதா மகாலட்சுமி விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக ரட்சிதா மகாலட்சுமியிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.