புதுச்சேரி: காரைக்கால் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சிவக்குமார்.
இவர் மீது போஸ்கோ வழக்கை தவறாக கையாண்டது, காவல் நிலையத்தில் தொடர்ந்து கையெழுத்து இட வேண்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது, கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை விடுவித்தது என பல புகார்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளில் ஆதாரங்களின் அடிப்படையில் இவர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. விசாரணை அறிக்கையை பார்வையிட்ட டிஜிபி மனோஜ் குமார் லால், இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை அப்பதவியில் இருந்து சப் - இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம் செய்துள்ளார்.
காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: இதற்கிடையே புதுச்சேரி சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரவின் குமார் காரைக்கால் சிறப்புப் பிரிவுக்கும், சிக்மா பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சஜித் புதுச்சேரி மாவட்ட சட்ட மற்றும் நிர்வாகப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சிக்மா பாதுகாப்பு பிரிவு (தலைமையிடம்) இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் டிஜிபி செயலராகவும், ஆயுதப் படை மற்றும் சீனியர் எஸ்.பி. அலுவலக இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு சிக்மா பாதுகாப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் ஏடிஜிபி செயலாளராக இருந்த ரேணிகுமார் மாஹே காவல் நிலைய அதிகாரியாகவும், அங்கிருந்த பிரதீப் மாஹே கடலோர காவல் நிலையம் மற்றும் சிறப்புப் பிரிவுக்கும், புதுச்சேரி ஆயுதப் படை பிரிவில் இருந்த சப் - இன்ஸ்பெக்டர் ரீனா மரிய டேவிட் வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும்,
புதுச்சேரி ஐஜி அலுவலக சப் - இன்ஸ்பெக்டர் பிரமோத் கயானாடத் எப்.ஆர்.ஓ மற்றும் சீனியர் எஸ்பி அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதுச்சேரி காவல்துறை தலைமையிட எஸ்பி சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.