க்ரைம்

சேலம் | ரூ.15,000 லஞ்சம் வாங்கிய சேலம் தாட்கோ மேலாளர், உதவியாளர் கைது

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தாட்கோ நிறுவனத்தில் டிராக்டர் வாங்க மானிய கடன் உதவி வழங்குவதற்கு ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மேலாளர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டம் முழுவதும் உள்ள பொது மக்களுக்கு தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பெத்தநாயக்கன்பாளையம் மணியார் குண்டம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், தாட்கோ மூலம் டிராக்டர் வாங்க கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டார்.

இதற்கான விண்ணப்பங்கள் அளித்த நிலையில், அவரிடம் நேர்காணலும் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரூ.7.50 லட்சம் மதிப்பிலான கடனுக்கு, 50 சதவீதம் மானியம் வழங்குவதற்காக ரூ.15 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என மாவட்ட மேலாளர் (பொறுப்பு) சாந்தி கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவுறுத்தல் படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மாவட்ட மேலாளர் சாந்தியிடம், குமார் கொடுக்க வந்தார். அலுவலக உதவியாளரான மற்றொரு சாந்தியிடம் வழங்குமாறு கூறியதையடுத்து அவரிடம் பணத்தை வழங்கினார். அப்போது, அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் தாட்கோ மேலாளர் சாந்தி, உதவியாளர் சாந்தி ஆகியோரைப் பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT