தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் கோழி மற்றும் மீன் பண்ணைகளுக்கு விற்பனை செய்வதற்காகக் கடத்தி வரப்பட்ட 2,350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருச்சி மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் எஸ்பி சுஜாதா உத்தரவின் பேரில் ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் முக்கூட்டு சாலையில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த, ஒரு சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 50 கிலோ எடை கொண்ட 47 மூட்டைகளில் 2,350 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த உரிமையாளரான புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம், செல்லனேந்தல் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் திருமூர்த்தி (24) என்பவரைக் கைது செய்தனர். மேலும், சரக்கு வாகனத்தையும், அதிலிருந்த ரேஷன் அரிசியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் மீமிசல் பகுதியில் உள்ள பொது மக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி, அதனைப் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதியிலுள்ள கோழி மற்றும் மீன் பண்ணைகளுக்கு விற்பனை செய்ய எடுத்து வந்துள்ளதாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.