திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கோயில் விழாவில் மிளகாய் பொடியை தூவி ஆயுதங்களுடன் தாக்க முற்பட்டதாக பெண் ஊராட்சித் தலைவர் உட்பட 14 பேர் மீது நாச்சியாபுரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கூத்தலூர் அம்பேத்கர் நகரில் மாயசின்னான் கோயில் படைப்பு விழாவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சாமி கும்பிட்டு கொண்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மிளகாய் பொடியை தூவி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்க முற்பட்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் மீனாள் (50), அவரது கணவர் சுப்பிரமணியன் (60) உட்பட 14 பேர் நாச்சியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.